மிஸ் பண்ணிடாதீங்க… கோவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் சமீரன் தகவல் ..!

கோவை மாவட்டத்தில மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 12 வட்டாரங்களில் காலியாக உள்ள 33 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 12 வட்டாரங்களில் 33 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடமும், மதுக்கரை மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் வட்டார மேலாளர் பணியிடமும் காலியாகவுள்ளன. இந்த 35 காலிப் பணியிடங்களும் மாவட்ட அளவிலான போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வட்டார மேலாளர் பணியிடத்துக்கு ரூ.15 ஆயிரமும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கு ரூ.12 ஆயிரமும் மாத ஊதியம் வழங்கப்படும். இரண்டு பணியிடங்களுக்கும் குறைந்தபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் தொடர்பான 6 மாத சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். வட்டார மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்டத்துக்குள் குடியிருப்பவராகவும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த வட்டாரத்துக்குள் குடியிருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தில் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இரண்டு பணியிடங்களுக்கும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களின் பணியில் போதிய திருப்தியில்லாத நிலை ஏற்பட்டால் இணை இயக்குநரால் பணி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது.
எனவே மேற்காணும் தகுதிகள் மற்றும் விருப்பமுள்ள பெண்கள் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.