மெழுகுவர்த்தியைப் போல் திமுக ஆட்சியும் விரைவில் உருகும்: உண்ணாவிரதப் போராட்டத்தில் அண்ணாமலை பேச்சு..!

சென்னை: தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, மெழுகுவர்த்தியை போல திமுக வின் ஆட்சியும், விரைவில் உருகும் என விமர்சித்துள்ளார்.

ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும், பாஜக பட்டியலணி மாநில தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் சிவானந்தா சாலையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, ”திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு பயமில்லை. சிசிடிவியில் முகத்தை கட்டிக்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். அதன் ஒருபகுதியாகத்தான் திமுக கவுன்சிலர் இக்கொலையை தைரியமாக செய்திருக்கிறார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறு கண்டனம் கூடதெரிவிக்கவில்லை. மெழுகுவர்த்தியை போல் திமுகவின் ஆட்சியும், விரைவில் உருக்குலைய தான் போகிறது” என்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், காவல்துறை தனது கட்டுப்பாட்டில் இல்லைஎன்பதை முதல்வரே ஒத்துக்கொள் வார். அப்படி இருந்திருந்தால் தினமும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்காது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாநில தேர்தல்ஆணையம் தனது பணியை சரியாகசெய்யவில்லை. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். மத்திய தேர்தல் ஆணையம் உள்ளே வருமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்துக்கு பாஜக சார்பில் உடனடியாக ரூ.10 லட்சம் காசோலை வழங்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து அவரது 2 குழந்தைகளின் படிப்புசெலவை பாஜக ஏற்றுக்கொள்கிறது. மேலும் பாஜக அவரது குடும்பத்தை அரணாக இருந்து பாதுகாக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்.

தமிழகத்தில் எப்போது ஆர்எஸ்எஸ் பேரணியை தடை செய்தார்களோ, அப்போதிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு மாதந்தோறும் புதிதாக சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 மடங்காகஉயர்ந்திருக்கிறது. இந்த பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தில் இருந்து பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று போர் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில்பாஜக மாநிலத் துணைத்தலைவர் கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி, மாநில இளைஞர் அணி தலைவர் வினோத்.பி.செல்வம், மூத்தராணுவ அதிகாரி நாராயணன், கர்னல் பாண்டியன், மேஜர் மதன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆளுநருடன் சந்திப்பு: இதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மனு அளித்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏராளமான முன்னாள் ராணுவ அதிகாரிகள் துயரத்தில் இருக்கின்றனர். எனவே இதுகுறித்து என்னுடன் வந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் தங்களது குமுறல்களை ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வர் மவுனமாக இருக்கிறார். அவரது பணி நம்பிக்கையூட்டும் விதத்தில் இல்லை. எனவே ஆளுநர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாஜக பட்டியலின அணி தலைவர் தடா பெரியசாமியின் காரை விசிகவினர் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரையும் பரிசீலிப்பதாக ஆளுநர் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.