தலித் தலைவர்கள், ஈழ பிரச்சனை விவகாரம்:அவசியமற்ற விவாதத்தை தவிர்க்கவும் : திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!!

சென்னை: தலித் தலைவர்கள், இலங்கை விவகாரங்கள் குறித்து இணையதளத்தில் இயங்கும் திமுகவினர் அவசியமற்ற விவாதம் மேற்கொள்ள கூட்டாது என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலித் தலைவர்கள், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம், ஈழத் தமிழ் தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அண்மைகாலமாக விவாதங்கள் அனல்பறந்தன. இது தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகள், இளைய தலைமுறை இடையே கருத்து வேறுபாடுகளும் வலம் வந்தன.

இந்த நிலையில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் சமூக வலைதளங்களில் திமுகவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை விளக்கினார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது, சமீபகாலமாகத் தேவையற்ற சில விமர்சனங்களை நம்முடைய இணையதளத் தோழர்களில் சிலர் செய்கிறார்கள். அதையும் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் கவனத்துக்கு எதுவும் தப்புவதில்லை. தலித் தலைவர்கள் குறித்தும், இலங்கை விவகாரங்கள் குறித்தும் அவசியமற்ற விவாதங்களைச் சிலர் செய்வது மூலமாகக் திமுகவுக்கு அவர்கள் நன்மையைச் செய்யவில்லை; கெட்ட பெயரைத்தான் தேடித் தருகிறார்கள். அதுபோன்ற செயல்களைச் செய்யாதீர்கள்.

நம்மிடம் சொல்வதற்கு ஏராளமான சாதனைகள் இருக்கின்றன. நம்மிடம் சொல்வதற்கு வரலாறு இருக்கிறது. நமது முன்னோடியான தலைவர்கள், மிகப்பெரியவர்கள், லட்சிய வேட்கை கொண்டவர்கள், அதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள்- இதைச் சொன்னாலே போதும். தேவையில்லாததைச் சொல்ல வேண்டாம்.

தொலைக்காட்சி ஊடகங்கள், இணையத்தளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வரிசையில் அதிகப்படியான மக்களால் படிக்கப்படுவது வாட்ஸ்அப் செய்திகள்தான். புதிய புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குங்கள். நம்மைப் போல சிந்தனைகள் கொண்டவர்கள் மட்டுமே இருக்கிற குழுக்களில் கொள்கைகள், செய்திகளை விவாதிக்கலாம். ஆனால், அதன் மூலமாக நமது சாதனைகளை, வரலாற்றைச் சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது.

அதனால் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் நம்முடைய செய்திகளைப் பகிருங்கள். பொய் சொல்வதற்கே சிலர் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? அந்தத் தயக்கத்தை உடைத்து எறியுங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.