திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 3-வது நாளாக ஐ.டி ரெய்டு..!

சென்னையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனின் இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பட்டாபிராம் பகுதியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரி பணியாளர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதி, பள்ளிக்கரணையில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனை ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், வீட்டில் ரகசிய அறை உள்ளதா என வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை மேற்கொள்ள வந்திருந்த அதிகாரிகள் வீட்டிற்குள் செல்லாமல் வீட்டின் பின்புறம் இருந்த பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அங்கிருந்த சுவர்களை தட்டிப் பார்த்தும் ஆய்வுகளை செய்தனர். ஏதேனும் ரகசிய அறைகள் இருக்கிறதா, அங்கு ஏதேனும் ஆவணங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தெல்லாம் ஆய்வு நடத்தப்பட்டது. இதேபோல், அவரின் விலையுயர்ந்த கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, ஆவணங்களுடன் பெண்ணொருவர் வெளியேறியதை கண்ட அதிகாரிகள், அவரையும் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். தற்போதைக்கு கைப்பற்றப்பட்ட பணத்தை மெஷின் மூலம் எண்ணும் பணிகளும் நடந்து வருகிறது. கடந்த 2020இல் இவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டிருந்த அமலாக்கத்துறையினர் அவரது ரூ. 89 கோடி மதிப்பிலான சொத்துக்களை அப்போது முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இச்சோதனையை வருமான வரித்துறை நடத்தி வருகிறது.