பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் அறிவிப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகின்ற 11.09.2023 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக வரும் நபர்கள் கீழ்கண்ட அறிவிப்புக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

1. இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள் (T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில் (Open type) வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE), சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை.

2. சொந்த வாகனங்கள் மூலம் (கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்கள் மட்டும்) வருகை தருபவர்கள் வாகன எண், வாகள பதிவு சான்று, வாகன ஓட்டுநர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 08.09.2023 தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் (DSP Office) அளித்து வாகன அனுமதி சீட்டு (Vehicle Pass) பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

3. பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வரும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற்று வர வேண்டும்.

4. சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும்.

5. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.

6. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக்கூடாது. வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

7. வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக்கூடாது.

8. வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் துாண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.

9. பரமக்குடி நகருக்குள் சந்தைப் பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது.

10.வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது.

11.அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 10.00 மணிக்குள் புறப்பட வேண்டும்.

12.பேருந்துகளில் பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது.

13.பேருந்துகளில் படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.

14. பேருந்துகளில் அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும்.

15.கூடுதல் பேருந்துகள் 11.09.2023 ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே இயக்கப்படும்.

16. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் வரும்பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும், மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.

17. நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணமாக செல்லலாம்.

18.ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.

19.சொந்த ஊரில் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்.

20. அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை

21. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி இல்லை.

22. பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2023 ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும்.

23. அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.09.2023 மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.