பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனு தள்ளுபடி ..!

பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுவதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் வருண்குமார் சின்கா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பொதுநல மனுவில், `மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்யக்கூடிய விஷயம். எனவே விதிமுறைகளுக்கு மீறி நடத்தப்படும் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் `சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் சமமான சட்ட பாதுகாப்பு அளித்தல் ஆகியவற்றை நிலைநிறுத்தும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை பீகார் அரசு மீறுவதாக இருக்கின்றது. எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இது குறித்து பீகார் உயர்நீதிமன்றத்தை நாடுங்கள்’ என வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.