நான் கூட இடைத்தேர்தலில் போட்டியிடலாம்- அமமுக நிலைப்பாடு குறித்து டிடிவி தினகரன் சொல்ல போகும் முக்கிய அறிவிப்பு..!

ரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 10 ஆண்டுகள் கட்சியிலேயே இல்லாமல் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றிபெற்றேன் என்று கூறிய டிடிவி தினகரன், இடைத்தேர்தலில் போட்டியிடும் தைரியம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது முதலே அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் பின்னர் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். திமுக கூட்டணி சார்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில், அதிமுக நேரடியாக போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஈரோடு மாவட்ட அமமுக நிர்வாகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணமாக இருக்கிறது. எங்களை பொறுத்தவரை திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.

அதற்கான அமமுக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பது ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல், திமுகவுக்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி இருக்கிறது. ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் சில நேரங்களில் மாறியும் இருக்கிறது. ஆர்கே நகர் போல் மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, இரட்டை இலை பற்றிய கேள்விக்கு, இரட்டை இலை தான் அங்கு தலைமை தாங்கி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வமோ இல்லை. இதனால் இருவரும் தங்கள் தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தினால், இரட்டை இலை முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி அணி பணபலத்தை நம்பியே களத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.

பின்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, தேர்தலில் போட்டியிட எப்போதும் நான் பயந்ததில்லை. இடைத்தேர்தலில் போட்டியிட எப்போதும் தயார். 10 ஆண்டுகள் கட்சியிலேயே இல்லாமல் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றிபெற்றேன். இரட்டை இலை கூட இல்லாமல் சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.