முசிறியில் நாயக்கர் காலத்து செப்பு பட்டயங்கள் கண்டெடுப்பு- தகவல் பட்டயத்தில் குறிப்பீடு..!

முசிறி : திருச்சி மாவட்டம் முசிறியில் நாயக்கர் காலத்து நான்கு செப்பு பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்து சமய அறநிலையத்துறையில் மண்டல தொல்லியல் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆமூர் நாக.கணேசன்.இவர் இப்பகுதியில் உள்ள கோயில்களை ஆய்வு செய்தபோது இந்த சிறப்பு வாய்ந்த பட்டயங்கள் தெரிய வந்தது.

முசிறி சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயிலில் இச்செப்பு பட்டயங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மன்னர்கள், குறுநில மன்னர்கள், நாட்டு சபையர்கள். நில உரிமையாளர்கள், வணிகர்கள், போன்றோர் வழங்கிய கொடைகள் பற்றிய விவரங்களை கோயில்களின் சுவர்களிலும், பாறைகளிலும், தனிக்கல்லிலும் பொரித்து வைத்ததோடு, அதன் நகலினை செப்பு தகடுகளிலும், பனை ஓலைகளிலும், எழுதி வைத்தனர்.

அரசன் தானம் அளித்த பொழுது தானத்தை பெற்றோர் அரசனின் ஆணையை கல்லிலும், செம்பிலும் வெட்டிக்கொள்ள கடவாராகவும் எனக் கூறிதான் விவரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என ஆணை இடுவதுண்டு.

துப்பாகுழு ராமகிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சியின்போது, முசிறி சந்திரமவுலீஸ்வரர் திருக்கோவிலுக்கு பொதுமக்களும், தனிநபரும் வழங்கிய நிலக்கொடைகள், பணக்கொடைகள் பற்றிய விவரங்கள் இந்த செப்பு பட்டயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு செப்பேடுகளும் ஒவ்வொன்றும் 31 செ.மீ நீளம், 22 செ.மீ அகலம், 310 கிராம் எடையும் கொண்டவை. ஒரு செப்பேடு 32 செ.மீ நீளம், 22 செ.மீ அகலம், ஒரு கிலோ 35 கிராம் எடையுள்ளது.

மற்றொரு செப்பேடு 25 செ.மீ, நீளம் 14.5 செ.மீ அகலம் 685 கிராம் எடையுள்ளது. ஒவ்வொரு செப்பேட்டின் தொடக்கத்திலும்  துப்பாக்குலு ராமகிருஷ்ணப்ப நாயக்கரின் முன்னோரான கிருஷ்ணதேவராயர், அச்சுத தேவராயர், சதாசிவ மகாராயர், சீரங்க தேவ மகாராயர், வேங்கட பதிராயர் போன்ற விஜய நகர மன்னர்கள் பற்றியும் விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கர், சொக்கநாத நாயக்கர், விஜயரங்க சொக்கநாத நாயக்கர், போன்ற நாயக்க மன்னர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழப்பேரரசு வளநாடு, கூற்றம், நாடு, பேரூர், சிற்றூர் என பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டது. சோழப்பேரரசின் இத்தகைய நிர்வாக அமைப்பிலும் நாயக்கர் காலத்தை நிர்வாக அமைப்பிலும்,முசிறி பெரிய ஊராக விளங்கியுள்ளது.

முசிறியில் இருந்து குழித்தலை வழியாக உறையூர் மேலே சாவடிக்கு (குளித்தலை) குழித்தண்டலையை சேர்ந்த கவுந்தா செட்டி, தம்பி செட்டி, கலிச்சி செட்டி, காத்தி செட்டி போன்ற வணிகர்கள் பொருட்களை எடுத்து சென்று வணிகம் மேற்கொண்டதையும் வணிகப் பொருட்களுக்கு சுங்கவரி செலுத்தியதையும் சுங்க வரியில் ஒரு பகுதியை மும்முடி சோழப்பேட்டை சோழீஸ்வரமுடையார் கோயிலுக்கு தானமாக வழங்கியதையும் இந்த செப்பேடுகள் விளக்குகின்றன.

அயிலூர், காட்டுப்புத்தூர், நத்தம், நாட்டு கணக்கர்கள் வசூலித்த மகிமையின் (வரி) ஒரு பகுதியை சோழிஸ்வரமுடையார் கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். கம்பய நாயக்கரின் மகன் குமாரகம்பைய நாயக்கர், சோழீஸ்வரமுடையார் கோயிலுக்கு பணக்கொடை அளித்துள்ளார். இப்பணக் கொடையர்களை தாண்டவராய முதலியார் வசூலித்து மும்முடி சோழப்பேட்டை சோழீஸ்வரமுடையார் கோயிலில் பூசைகளையும், விழாக்களையும் நடத்தியுள்ளார். கோபாலகிருஷ்ண சமுத்திரம் மற்றும் சுண்டைக்காய் ஊர் பொதுமக்கள் சோழீஸ்வரமுடையார் கோயிலுக்கும், தேவதாசிகளுக்கும் மானியமாக நிலக்கொடை அளித்த தகவல் ஒரு செப்பேட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நாடு சுதந்திர நாடாக மாறிய பிறகும் நாட்டில் தேவதாசி முறை இருந்தது. நாயக்கர் காலத்தில் தேவதாசி முறை இருந்ததையும் தேவதாசிகளுக்கு நில உடமையாளர்கள் மானிய நிலம் வழங்கியதையும் இச்செப்பேடுகள் வெளிப்படுத்துகின்றன. கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் மேலை கடற்கரையில் உள்ள முசிறி (பட்டினம்) துறைமுகத்தில் இருந்து பாலக்காடு, கரூர், குழித்தண்டலை உறையூர் வழியாக கீழை கடற்கரையில் உள்ள காவிரி பூம்பட்டினத்திற்கு வணிக பெருவழி சென்றுள்ளது. அவ்வணிக பெருவழி நாயக்கர் காலத்திலும் பயன்பாட்டில் இருந்துள்ளது.

வணிகர்கள் மும்முடி சோழப்பேட்டையில் இருந்து, குழி தண்டலை வழியாக உறையூர் மேலை சாவடி வணிக சந்தைக்கு பொருட்களை எடுத்துச் சென்று வணிகம் செய்துள்ளனர். உறையூர் மேலை சாவடிக்கு செல்லும் வழியில் மேய்கோட்டு நாட்டு எல்லையில் வணிகர்கள், சுங்கவரி செலுத்தியுள்ளனர் என்று வரலாற்று தகவல்களை இந்த செப்பேடுகள் குறிப்பிடுகின்றன என ஆய்வாளர் நாக.கணேசன் தெரிவித்துள்ளார்.