கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி… பீளமேடு, ஜி.என்.மில்ஸ், உக்கடத்தில் தீவிர கண்காணிப்பு .!!

கோவை: கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி சார்பில் கூடுதலாக 200 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கோவை மாநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். குடியிருப்பு பகுதியில் டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் தேங்க பயன்படும் டயர், இளநீர் ஓடுகள், மூடி வைக்கப்படாத சிமென்ட் தொட்டிகள், ஆட்டு உரல்கள் போன்றவை அப்புறப்படுத்தப்படுகின்றன. தடுப்பு மருந்துகளும் தெளிக்கப்படுகின்றன.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ”பருவ மழை விட்டு விட்டு பெய்கிறது. இதுபோன்ற சூழலில், பயன்படுத்தப்படாத பழைய பொருட்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாக வாய்ப்புள்ளது. 100 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் தற்போது 630 பேர் உள்ளனர்.

ஒரு வார்டுக்கு 6 முதல் 8 பேர் பணியாற்றுகின்றனர். மேலும், கூடுதலாக 200 பேர் நியமிக்கப்பட உள்ளனர். பீளமேடு, ஜி.என்.மில்ஸ், உக்கடம் பகுதிகளில் டெங்கு பரவல் அதிகம் உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் பழைய பொருட்கள், இரும்பு ஸ்கிராப்புகளில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகிறது.

டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடுகளுக்கு சுழற்சி முறையில் சென்று நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள். வீட்டின் மொட்டை மாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தால் அதில் அபேட் மருந்து ஊற்றுவார்கள். மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன” என்றார்.