ஆசிய விளையாட்டு : சிங்கப்பூரை பந்தாடியது இந்திய ஹாக்கி அணி.!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது லீக் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கு அதிகமான வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். வரும் 8ம் தேதி வரையில் 40 விளையாட்டுகள் 400 வகையிலான போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில், சீன அதிகப்படியான தங்கப்பதக்கங்களை குவித்து வருகிறது. இந்நிலையில், நான்காவது நாளான இன்று, பிரிவு ஏ-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது இரண்டாவது லீக் போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொண்டது.

முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கணக்கில் ஊதித்தள்ளி பெற்ற வெற்றியின் களிப்பில் இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். இந்திய அணியின் வேகத்தை சமாளிக்க முடியாமல், சிங்கப்பூர் அணி வீரர்கள் தடுமாறினார். இந்த வாய்ப்ப்பை பயன்படுத்தி இந்திய அணி கோல் மழை பொழிந்தது. இதனால், ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 16-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 4 கோல்களை பதிவு செய்தார்.

இந்திய வீரர்கள் மன்தீப் சிங் (12′, 30′, 51′), லலித் உபாத்யாய் (16′), குர்ஜந்த் சிங் (22′), விவேக் சாகர் பிரசாத் (23′), ஹர்மன்பிரீத் சிங் (24′, 39′,40′, 42′) , மன்பிரீத் சிங் (37′), சம்ஷேர் சிங் (38′), அபிஷேக் (51′, 52′), வருண் குமார் (55′, 56′) ஆகியோர் கோல் அடித்து இந்தியாவின் அபார வெற்றிக்கு வழிவகுத்தனர். சிங்கப்பூர் அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, போட்டியின் 53வது நிமிடத்தில் முஹம்மது ஜாக்கி பின் சுல்கர்னைன் ஒரே ஒரு கோல் அடித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு லீக் போட்டிகளின் முடிவில், இந்திய அணி இதுவரை 32 கோல்களை பதிவு செய்துள்ளது. இரண்டு போட்டிகளிலும் பெற்ற அபார வெற்றி மூலம், புள்ளிப்பட்டியலி முதலிடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து வரும் வியாழனன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்கொள்ள உள்ளது. லீக் சுற்றின் முடிவில் இரண்டு பிரிவிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும், நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி ஏற்கனவே மூன்று மூறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி பிரிவில், தங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.