வெளியானது காங்கிரஸ் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்… முன்னாள் முதல்வர்களின் மகன்களுக்கு வாய்ப்பு.!!

மக்களவைத் தேர்தலுக்கு இரண்டாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஏற்கெனவே முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் காங்கிரஸ் வெளியிட்டது.

2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். இதில் அசாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அறிவிக்கப்பட்டுள்ள 43 வேட்பாளர்களில் 25 பேர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய பிரதேசத்தின் சிந்திவாரா தொகுதியில் கமல்நாத் மகன் நகுநாத் போட்டியிடுகிறார். ராஜஸ்தானில் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ராஜஸ்தானின் ஜல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, முதற்கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை மார்ச் 8ம் தேதியன்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இந்த 39 பேர் அடங்கிய பட்டியலில் 24 பட்டியலின வேட்பாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில், சத்தீஸ்கரில் 6, கர்நாடகாவில் 6, கேரளாவில் 15, தெலங்கானாவில் 4, மேகாலயாவில் 2, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் 2வது முறையாக ராகுல்காந்தி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.