தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் பகிர்ந்த எஸ்பிஐ வங்கி.!!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.

இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தை நாடியது.

கூடுதல் அவகாசம் கோரி எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இன்றுக்குள் விவரங்களை சமர்பிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி இன்று சமர்பித்துள்ளது. எஸ்பிஐ வங்கி சமர்பித்த தரவுகளை வரும் 15ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் தங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்தல் பத்திரத்தை வாங்கியவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு நன்கொடை கொடுத்தார்கள் என்பது பற்றிய தகவலையும், எந்த அரசியல் கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றார்கள் என்பது பற்றிய தகவலையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி தனித்தனியே அளித்துள்ளதாக கூறப்படுகிறது.