ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் குவியும் புகார்கள்-குறி வைத்த பாஜக..!

ந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ . ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், அசோக் நகர் காவல் நிலையத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி உள்ளிட்டோர் புகார் கொடுத்துள்ளனர். இதுபோல தமிழகத்தில் இன்னும் பல காவல்துறை புகார்கள் குவிந்து வருகிறது

மறுபுறம் திருமாவளவனைப் போல ஆ.ராசாவை பாஜகவினர் குறிவைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று பாஜக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த வரிசையில் நீலகிரி தொகுதி திமுக எம்பி ஆ. ராசா சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான், இந்துவாக இருக்கிறவரை தீ தீண்டதகாதவன்தான், சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ன ஒரு கேள்வி எழுப்பினார்.

அவரின் இந்த பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது, ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராசாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்துள்ளது, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆ.ராசாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது, இந்துக்கள் குறித்தும் , இந்து மதம் குறித்தும் இழிவாக பேசி அவரை திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் இதை அவர் ஏற்றுக் கொள்கிறாரா என்பதை அவர் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பல்வேறு பாஜகவினர் ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். இதேபோல சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் சென்னை மாநகராட்சியின் 134 வது வார்டு பாஜக உறுப்பினருமான உமா ஆனந்தன்,ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார். இவர்களைப் போல பலர் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். இதேபோல் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுகவினரும் ராசாவின் விமர்சித்துள்ளனர்.

இன்று நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆ.ராசா சொன்ன வார்த்தை ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா என மக்கள் கேட்கிறார்கள் என கேள்வி எழுப்பினார், அவரது இந்த கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இதேபோல முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்துக்கள் என்றால் விபச்சாரியின் வீட்டுப் பிள்ளைகள் என ராசா பேசிவிட்டார், அப்படி என்றால் கோவில் கோவிலாக போகும் துர்கா ஸ்டாலின் சபரீசன் போன்றோர் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே நேரத்தில் ஆ. ராசாவின் பேச்சுக்கு பெரியாரிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மனுதர்மம் என்ன சொல்லியிருக்கிறதோ அதை தான் ராசா கூறியுள்ளார். அவராக எதுவும் கூறவில்லை, அது அவருடைய கருத்து அல்ல, இந்து மதத்தில் தான் அப்படி சொல்லப்பட்டுள்ளது. அதை தான் அவர் எடுத்துக் கூறியுள்ளார், அதில் ஒரு தவறும் இல்லை என ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மனுதர்மத்தில் பெண்கள் இழிவு படுத்தப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி விடுதலை சிறுத்தைகள் தலைவர் ,நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேசிய நிலையில், திருமாவளவன் ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தி விட்டார் என பாஜகவினர் திரித்துக் கூறி வந்தனர். தற்போது அதே பாணியில்தான் ஆ. ராஜாவையும் பாஜகவினர் குறிவைத்து வருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.