பற்கள் பிடுங்கிய விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் – உண்மை அறியும் குழு பரிந்துரை..!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக மனிதம் என்ற மனித உரிமைகள் அமைப்பின் உண்மை அறியும் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர்.

அமைப்பின் மாநில நிர்வாகி வழக்கறிஞர் என். ராமர் தலைமையில், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில குழு உறுப்பினர் பி. முருகன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அருள் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அவர்களின் உறவினர்களை சந்தித்து பேசினர்.

இக் குழுவின் அறிக்கையை மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திருநெல்வேலியில் நேற்று வெளியிட்டார். கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள பரிந்துரைகள்: ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட கடந்த 10.3.2023-ல் பணியில் இருந்த அனைத்து காவலர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏஎஸ்பி பல்வீர்சிங்கால் விசாரிக்கப்பட்ட அனைத்து விசாரணை கைதிகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும். காவல்துறையினரின் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் போதிய நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும். சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணையை முழுமை யாக ரத்து செய்ய வேண்டும்.

காவல்துறையினருக்கும், அதிகாரி களுக்கும் காவல் கல்வி என்ற பயிற்சியை தொடர்ந்து அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் முன்பே ஒப்புதல் அளித்திருந்தால், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க மாட்டார்கள். பல லட்சம்பேர் சொத்துக்களை இழந்திருக்க மாட்டார்கள்.

அம்பாசமுத்திரம் கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. தமிழக அரசு இதை ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று தெரியவில்லை.

திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், அரசின்மீது குறை ஏற்படும்போது உரிய முறையில் எதிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.