பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.96.17 இலட்சம் வசூல்.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி  பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன், ஆய்வர் சிவமணி, பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், அமுதா, கண்காணிப்பாளர் பாலசுந்தரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ராஜன் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். எண்ணிக்கை முடிவில் ரூ. 96 இலட்சத்து 17 ஆயிரத்து 358 ரொக்கமும், 493 கிராம் தங்கமும், 993 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு நாணயங்களும் இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..