10 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோவை டி.வி.யில் போட்டு காண்பித்த திருமண புரோக்கர் கைது..!

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62). திருமண புரோக்கர். இவரது வீட்டின் அருகே அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது சிறுமியின் தாத்தாவும், பழனிசாமியும் டி.வி.யில் படம் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியும் அவர்களது அருகில் அமர்ந்து படம் பார்த்து உள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் சிறுமியின் தாத்தா வெளியே சென்று விட்டார். அப்போது சிறுமியும், பழனிசாமியும் படம் பார்த்து கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் அவர் தனது வீட்டில் மறைத்து வைத்து இருந்த ஆபாச வீடியோவை டி.வி.யில் போட்டு சிறுமிக்கு காண்பித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கு இருந்து வெளியே சென்றார். பின்னர் நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு ஆபாச வீடியோ போட்டு காண்பித்த திருமண புரோக்கர் பழனிசாமியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.