கோவை பம்ப்செட் நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு- தொழிலாளர்களுக்கு மாதத்தில் 12 நாட்கள் கட்டாய விடுமுறை..!

கோவை: இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கான பம்ப்செட் பயன்பாட்டில் கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
5 எச்.பி (குதிரை திறன்) முதல் அதிகபட்சமாக 50 எச்.பி மற்றும் அதற்கு மேல் திறன்கொண்ட பம்ப்செட் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.1,500-ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை மதிப்பிலான பல்வேறு மாடல்களில் பம்ப்செட் தயாரிக்கப்படுகின்றன. பம்ப்செட் விற்பனை மிகவும் குறைந்துள்ளதால் கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் மாதந்தோறும் 12 நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
இந்தாண்டு நாடு முழுவதும் வழக்கத்தை விட பருவமழை அதிகரிகத்து காணப்படுகிறது. இதனால் விவசாய தேவைக்கான பம்ப்செட் விற்பனை மந்தமாக உள்ளது. ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் மூலப்பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பம்ப்செட் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் மாதந்தோறும் 12 நாட்கள்(ஞாயிறு உட்பட) கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
கொரோனா நோய்தொற்று பரவலுக்கு பின்னர் இன்று வரை பம்ப்செட் தொழில் குறிப்பாக குறுந்தொழில் நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை. பலர் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். குறுந்தொழில்களுக்கு வழக்கமாக தமிழகம், கர்நாடகா, கேரளாவில் தான் அதிக விற்பனை இருக்கும். தற்போது விற்பனை மிகவும் குறைந்துள்ளது. 40 பேர் பணியாற்றிய குறுந்தொழில் நிறுவனங்களில் தற்போது 10 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 30 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். ஜி.எஸ்.டி வரி, மூலப்பொருட்களின் விலையை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேவைப்படும் பம்ப்செட் பொருட்களுக்கான தேவையில் குறிப்பிட்ட சதவீதம் குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.