திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசு பணியாளர் நகரை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 40). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ, (34). இவரும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலைய சுபஸ்ரீ, திடீரென மாயமானார். இதையடுத்து பழனிகுமார் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி பூண்டி அருகே உள்ள யோகா மையத்தில், 7 நாள் பயிற்சி வகுப்பிற்காக கடந்த, 11-ந் தேதி சென்றார். சம்பவத்தன்று பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர், மனைவியை அழைத்துச் செல்வதற்காக நான் வந்தேன். அப்போது வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை இதனால் நான் யோகா மையத்தின் உள்ளே சென்று விசாரித்தேன். அங்கு பயிற்சி முடித்து, அனைவரும் கிளம்பி விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி காமிராவை ஆய்வு செய்தேன். அதில் பதிவான காட்சிகளை பார்த்த போது, பயிற்சி முடித்த பின்னர், சுபஸ்ரீ வெளியே வந்து ஒரு காரில் ஏறி சென்றது தெரிந்தது.
சம்பந்தப்பட்ட கார் டிரைவரிடம் விசாரித்த போது, சுபஸ்ரீயை செம்மேட்டில் இறக்கி விட்டதாக தெரிவித்தார்.அப்போது எனக்கு ஒரு எண்ணில் இருந்த மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணுக்கு திருப்பி அழைத்த போது மறுமுனையில் பேசியவர் ஒரு பெண் தனது கணவரிடம் பேச வேண்டும் என எனது போனை வாங்கி அழைத்ததாக கூறினார். எப்படியும் அவர் வீடு திரும்பி விடுவார் என பார்த்தேன். ஆனால் அவர் விடு திரும்பவில்லை. எனவே எனது, மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுபஸ்ரீயை தேடி வருகின்றனர்.
Leave a Reply