கழிவறையில் கோவை தொழில் அதிபர் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு- போலீசார் தீவிர விசாரணை..!!

கோவை ரத்தினபுரியில் உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 56) தொழிலதிபர். இவர் கணபதி செக்கான் தோட்டம் பகுதியில் ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படும் எந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவரது மனைவி மெர்லின் ‘இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடையவர் இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மெர்லின் கடந்த 6 மாதமாக கணவரை விட்டு பிரிந்து பெங்களூரில் வசித்து வருகிறார் .இதனால் குமார் தனது நிறுவனத்தின் அருகே அறை எடுத்து தங்கி இருந்தார் .இந்த நிலையில் அவரது அறைக்கு நேற்று ஊழியர் ஒருவர் சென்றார். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது .அவர் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. ஆனால் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து ரத்தினபுரி போலீசுக்கு தகவல் கொடுத்தார் .அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள கழிவறையில் அழுகிய நிலையில் குமார் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இவர் கழிவறைக்கு சென்றபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.