பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்..!

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள், தனியார் நிதி நிறுவனங்கள் அபராதம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர்களை கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆட்டோ டிரைவர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி வரும் நிதி நிறுவன அடி ஆட்களை கைது செய்ய வேண்டும்.கொரோனா கால முழு ஊரடங்கில் ஆட்டோக்கள் ஓடாத 8 மாத காலத்திற்கு முழு அபராத தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ளதை போல் முழு ஊரடங்கு காலத்தில் 4 மாத தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும்.தனியார் நிதி நிறுவனங்கள் ரூ.6000 மாத தவணைக்கு ரூ.10,200 அபராதமாக சேர்த்து ரூ.16,200 -யை செலுத்த சொல்கிறார்கள் அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.