கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வாழைத்தாரை தூக்கிச் சென்ற பொதுமக்கள்

கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வாழைத்தாரை தூக்கிச் சென்ற பொதுமக்கள்

கோவை: கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற நலத் திட்ட நிகழ்ச்சி முடிந்த கையோடு அங்கிருந்த பொதுமக்கள் தோரணத்திற்காக கட்டப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் இளநீர் ஆகியவற்றை தூக்கி சென்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 4 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார். இன்று காலை கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

அங்கு மிகப் பிரமாண்டமாக நடந்த அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவுத் துறை, கோவை மாநகராட்சி உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பேருக்கு ரூ.588 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவிலேயே 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரே நேரத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.