தென்னிந்தியாவை பிடிக்க மத கிறிஸ்துவ போதகர் களம் இறக்கும் அமித் ஷா- இன்னும் இந்த லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்ளோ..?

சென்னை: தெலுங்கானாவிற்கு நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து சென்றது தென்னிந்திய அரசியலில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அவரின் வருகை காரணமாக பாஜக தென்னிந்தியாவில் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கிவிட்டது என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் நேற்று நடிகர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஜூனியர் என்டிஆரை அமித் ஷா சந்தித்து பேசினார். இவர்கள் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டனர். இவை எல்லாம் தென்னிந்தியாவில் கால் பதிக்க பாஜக இறக்கும் திட்டங்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த், மாதவன் போன்றவர்கள், ஆந்திரா, தெலுங்கானாவிற்கு ஜூனியர் என்டிஆர், கேரளாவிற்கு மோகன்லால் என்று பாஜக முக்கியமான நடிகர்களை களமிறக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்தான் தென்னிந்தியாவில் சிறுபான்மையினரை குறி வைத்து கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை பாஜக களமிறக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஆந்திரா, தெலுங்கானாவில் பிரபலமாக இருக்கும் கே.ஏ பால் என்ற பாதிரியாரை அமித் ஷா சந்தித்து பேசினார். இதுதான் இந்த விவாதத்தை எழுப்பி உள்ளது.

இவர்களின் சந்திப்பு அப்போதே ஆந்திர பிரதேச அரசியலில் கவனம் பெற்றது. அதன்பின் வரிசையாக கே.ஏ பால் பல்வேறு பாஜக அமைச்சர்களை சந்தித்து பேசினார். அதற்கு முன்பாக இவர் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசியது கவனம் பெற்றது. அதோடு இவரின் பிறந்த நாள் உள்ளிட்ட விழாக்களுக்கு பிரதமர் மோடியே இவரிடம் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது (இதை அவரே சொல்லி இருக்கிறார்). இந்த நிலையில்தான் பாஜகவின் ஆபரேஷன் சவுத்தில் கே.ஏ பால் முக்கிய புள்ளியாக இருப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கே. அனந்த் பால் என்ற இவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான பாதிரியார் மற்றும் கிறிஸ்துவ மத போதகர் ஆவார். மத ரீதியான பிரச்சாரங்களில் ஈடுபடும் இவர் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு சென்று இருக்கிறார். சொந்தமாக ஒரு போயிங் 747 விமானம் வைத்து இருக்கும் அளவிற்கு இவர் பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் சொந்தமாக இரண்டு மதம் சார்ந்த நிறுவனங்களை வைத்து இருந்தார்.

ஏன் நேரடியாக அதிபர் பிடனையே இவர் சந்தித்து உள்ளாராம். சமீபத்தில் தான் அமெரிக்க அதிபர் பிடனை சந்தித்ததாகவும்.. உக்ரைன் போர் பற்றி அவரிடம் பேசியதாகவும் கூட கே. ஏ பால் தெலுங்கு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து பகிர் கிளப்பினார். இவர் சொன்னதை அப்படியே கேட்கும் பின் தொடர்பாளர்கள் இவருக்கு ஏராளம். இவரிடம் 100 பில்லியன் டாலர் சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனி தெலுங்கானா போராட்டத்திற்கு நிதி வழங்கியதில் இவரின் பங்கு முக்கியமானது, அங்கு ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு இவர் அதிக அளவில் நிதி வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர் பிரஜா சாந்தி கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டில் கிறிஸ்துவர்களின் வாக்குகளை கவர கே.ஏ பாலை பாஜக பயன்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இதை கே.ஏ பாலும் தி பிரிண்ட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில்.. நான் முதல்வர் கேசிஆருக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவராகும் திட்டத்தில் இருக்கிறேன்.

தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளாவில் பாஜக சார்பாக நாங்கள் போட்டியிட விரும்புகிறோம். அமித் ஷாவும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் என்று கே.ஏ பால் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.இந்த மூன்று மாநிலங்களில் இருக்கும் கிறிஸ்துவர்களின் வாக்குகளை கவர இவரை பாஜக களமிறக்க போவதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கால் பதிக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.

இதற்காகவே என்டிஆருடன் சந்திப்பு, ரஜினியுடன் அரசியல் பேச்சு என்று பாஜக, பாஜக சார்ந்த தலைகள் பிஸியாக உள்ளனர். இவர்களை போலவே பாஜகவின் ஆபரேஷன் தென்னிந்தியாவில் கே. ஏ பால் போன்ற மத போதகர்களும் பயன்படுத்தப்படுவார்கள் என்று பாஜகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்துவர்களின் வாக்குகள் கணிசமாக இருக்கும் தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளாவில் இவர் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.