மற்ற அனைத்து நாடுகளை விட இந்தியாவுக்கு கூடுதல் சலுகை

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாமல் தாமதமாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே இந்தியா அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக தூதரான ஜேமிசன் கிரீர் இன்று இந்தியா வருகிறார். இரு நாட்கள் அவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்தியா அமெரிக்கா இடையே பல்வேறு கட்டமாக வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சில விவகாரங்களில் இந்தியா அமெரிக்கா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.இதற்கிடையே அமெரிக்காவின் முக்கிய வர்த்தக தூதரான ஜேமிசன் கிரீர், வர்த்தக பேச்சுவார்த்தைக்காக இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு வருகிறார். அவர் இரு நாட்கள் இந்திய அதிகாரிகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தற்போதைய அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாக நிலவி வரும் பதற்றமான உறவைச் சீரமைப்பதில் இந்த வர்த்தக ஒப்பந்தம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக ரீதியான கருத்து வேறுபாடுகள் ஒருபுறம் இருக்க, வளைகுடா பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

ஆசியாவின் பிற நாடுகளை விட கூடுதல் சலுகைகளுடன் கூடிய ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பாக, வியட்நாம் உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகளை விட இந்தியாவுக்குக் குறைவான இறக்குமதி வரியை வழங்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இந்திய ஏற்றுமதியாளர்கள் பயனடையும் வகையில், அமெரிக்கா தங்களுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கும் என்பது குறித்து அந்நாட்டுடன் பேசி வருவதாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தற்போது விதித்துள்ள தற்காலிக 10 சதவீத இறக்குமதி வரி வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கு முன்பாகவே இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று பியூஷ் கோயல் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ, அந்த அளவுக்கு இரு நாடுகளுக்கும் நல்லது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒப்பந்தம் இறுதியான பிறகு அமெரிக்கா புதிய வரிகளை விதிக்காது என்ற உறுதியான வாக்குறுதியையும் இந்தியா கோருகிறது. பேச்சுவார்த்தைகள் ஏதேனும் காரணங்களால் தடைப்பட்டால், அமெரிக்கா மீண்டும் வரி அச்சுறுத்தல்களை விடுக்கலாம் என்ற அச்சமும் மத்திய அரசு அதிகாரிகளிடையே உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதமே முதற்கட்ட உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி இந்தியப் பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்க அமெரிக்காவும், அதற்குப் பதிலாக தன் நாட்டுச் சந்தையில் இருக்கும் வர்த்தகத் தடைகளைக் குறைத்துக் கூடுதல் அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டன. இது வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகளை விடக் குறைவான வரியாகும். ஆனால், ட்ரம்பின் உலகளாவிய வரி விதிப்பு முறையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், இந்த இறுதி ஒப்பந்தம் அப்போதே தடைப்பட்டது.