கண்ணியக்குறைவாக நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுப்பினர்களுக்கு பேரவையின் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேரவையில் பேசிய ஜேசிடி பிரபாகர், “சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டு வருகின்றன, இதனால் உறுப்பினர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றக் கூட்டத்தின் போது, சில உறுப்பினர்கள், கேலி, கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்ட காட்சிகள், கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுப்போன்ற கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபட வேண்டாம், நேரலையில் சட்டப்பேரவையின் நிகழ்வுகள் ஒளிப்பரப்பாவதால், அது தொடர்பான கண்ணியக்குறைவாக நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குதிரை பேரம், கழுதை பேரம் என்பதெல்லாம் பேசுவதற்கான இடம் அல்ல இது.
ஆதாரமற்ற எந்த பேச்சையும் அனுமதிக்க முடியாது. அனைவரும் ஒப்புக்கொண்ட தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுவது விதிகளின்படியும், மரபுபடியும் தவறு.. மேகதாது பற்றி பேச இனி இங்கே அனுமதி இல்லை. வேறு மொழியை தாய் மொழியாக கொண்ட ஆளுநா் அா்லேகரை தமிழை சாியாக உச்சாிக்கவில்லை என விமா்சிக்கக்கூடாது. வேறு மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் நமது தலைவர்களின் பெயா்களை உச்சரிப்பதையே நாம் பாராட்ட வேண்டும” என்றார்.







