கோவையில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு- 444 பேர் பங்கேற்பு..!

போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல்
திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி
மைதானத்தில் இன்று நடைபெற்றது.

தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30
மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ஒதுக்கீடு) காலை 8.30 மணிக்கும்
இந்த தேர்வில் கலந்துகொண்டனர். இதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர்
தேர்வாணையத்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு
இருந்தது. அழைப்பு கடிதம் பெறப்படாதவர்கள் இனையதள முகவரியில் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து இன்று நடைபெற்ற தகுதித் தேர்வில் 444 பேர் கலந்து கொண்டனர்.
அவர்களின் கல்விச்சான்று, ஜாதிச்சான்று, விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான
சான்று, தமிழ் வழி கற்றலுக்கான சான்று, முன்னாள் ராணுவத்தினருக்கான
படையில் விடுவிக்கப்பட்ட சான்று, காவலர் தடையின்மை சான்று ஆகிய அனைத்து
அசல் சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்டது.

அதன்பின்னர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தையம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து
தேர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் உயரம் மற்றும் மார்பளவு பரிசோதனை
செய்யப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நாளையும் தகுதித் தேர்வு நடைபெறும். அதில் கயிறு ஏறுதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தையம், 400 மீட்டர்
ஓட்டப்பந்தையம், நீளம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் நடைபெற உள்ளது.
இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சாண்றிதழ் அனுப்பப்படும்.
அடுத்தகட்டமாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும். உடல் தகுதித்
தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு ஐ.ஜி சுதாகர் மேற்பார்வையில்,
டி.ஐ.ஜி முத்துசாமி முன்னிலையில் நடைபெற்றது.