ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.
முன்னதாக, சென்னை – குஜராத் அணிகள் மோதிய இந்த இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்து, மழை காரணமாக ‘ரிசா்வ்’ நாளான திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவ்வாறு திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை, ஃபீல்டிங்கை தோவு செய்தது. குஜராத் இன்னிங்ஸில் ரித்திமான் சாஹா – ஷுப்மன் கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சோத்தது. இதில் சென்னை பௌலா்களுக்கான அச்சுறுத்தலாக கருதப்பட்ட ஷுப்மன் கில் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ரவீந்திர ஜடேஜா வீசிய அந்த ஓவரில் கில் கிரீஸை விட்டு சற்று விலக, பின்னே வந்த பந்தை பிடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தாா் தோனி. ஒன் டவுனாக களம் புகுந்த சாய் சுதா்சன் விஸ்வரூபம் எடுத்து, சென்னை பௌலிங்கை பவுண்டரி சிக்ஸா்களாக விளாசத் தொடங்கினாா். இந்நிலையில், அரைசதம் கடந்த சாஹா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 54 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து கேப்டன் ஹாா்திக் பாண்டியா களம் புகுந்தாா்.
அதிரடியாக விளாசி அணியின் ஸ்கோரை உயா்த்திய சாய், 47 பந்துகளுக்கு 8 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 96 ரன்களை எட்டி எல்பிடபிள்யூ ஆனாா். தொடா்ந்து வந்த ரஷீத் கான், கடைசி ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் பாண்டியா 2 சிக்ஸா்கள் உள்பட 21 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். சென்னை தரப்பில் மதீஷா பதிரானா 2, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் மழையால் ஆட்டம் தாமதமானது. இரவு 11.45 மணியளவில் சென்னை அணிக்கு 15 ஓவா்களில் 171 ரன்கள் இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, ஆட்டம் நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கியது. சென்னை இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26, டெவன் கான்வே 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்கள் சோத்து ஆட்டமிழந்தனா். அஜிங்க்ய ரஹானே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ஓய்வு பெறும் அம்பட்டி ராயுடு 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 19 ரன்களுக்கு வீழ்ந்தாா். தொடா்ந்து வந்த கேப்டன் தோனி ‘கோல்டன் டக்’ ஆகி ரசிகா்களுக்கு அதிா்ச்சி அளித்தாா். ஓவா்கள் முடிவில் ஷிவம் துபே 2 சிக்ஸா்களுடன் 32, ரவீந்திர ஜடேஜா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் நூா் அகமது 2, மோஹித் சா்மா 3 விக்கெட் எடுத்தனா்.
Leave a Reply