ரேட்டிங் என்ற பெயரில் அரங்கேறிய சீட்டிங்… கோவை வாலிபரிடம் நூதன வழிப்பறியில் ஈடுபட்ட சைபர் கிரிமினல்கள்..!

சைபர் கிரிமினல்களின் மோசடி நாளுக்கு நாள் வித்தியாச வித்தியாசமாக அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் ரேட்டிங் என்ற பெயரில் வாலிபர் சீட்டிங் செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை சைபர் கிரிமினல்கள் நூதன முறையில் அபகரித்திருக்கின்றனர் .

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் வாலிபர் சத்யநாதன். இவர் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதில் ஆன்லைன் முதலீடு குறித்த விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. பிரபல வணிக தளத்தில் பொருட்களுக்கு ரேட்டிங் தரும் பணியில் ஈடுபட்டால் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது . இதனை நம்பி வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்த அந்த நபர் அவர்கள் கேட்ட விவரங்களை பூர்த்தி செய்து இருக்கிறார். டாஸ்க் தரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2000 ரூபாய் முதலீடு செய்து 2900 ரூபாயை பெற்றிருக்கின்றார். லாபம் அதிகம் கிடைப்பதாக நினைத்து அடுத்தடுத்த பாஸ்டில் ஈடுபட நினைத்த சத்தியநாதன் ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை இகாமர்ஸ் வலைதளத்தில் முதலீடு செய்திருக்கின்றார். ஒரே மாதத்தில் சத்தியநாதன் ஏழு தவணையாக இந்த தொகையை ஆன்லைனில் செலுத்தி இருக்கின்றார் . இந்த நிலையில் முதலீடு செய்த பணத்தை, டாஸ்கை முடித்துவிட்டு எடுக்கலாம் என நினைத்த பொழுது பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போதே சத்தியநாதன் சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கின்றார். உடனடியாக சைபர் காவல் நிலையத்தில் பணத்தை பறிகொடுத்த வாலிபர் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிட்டி சைபர் கிரைம் போலீசார், வங்கி கணக்குகள் விவரங்களை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர் . சீட்டிங், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .