கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது – சிறையில் சதி திட்டம் தீட்டியது அம்பலம்..!

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது .இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இதை தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனம், பேரல் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன .இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தர்கா, முகமது அசாருதீன் ,முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் முகம்மது நவாஸ் இஸ்மாயில் அப்சர்கான் ஆகிய 6 பேரை உக்கடம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு மகிமைக்கு ( என். ஐ. ஏ). மாற்றப்பட்டது. அதன் பின் இந்த வழக்கில் உமர் பாரூக்,பெரோஸ் கான் முகமது தவ்பிக் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர் . இதை தொடர்ந்து இந்த வழக்கில் 11 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய 12 -வது நபராக கோவை உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரை கடந்த மாதம் 2-ந் தேதி என் ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் கைது செய்தனர் .மேலும் கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய உக்கடம் அன்பு நகரை சேர்ந்த மற்றொரு முகமது அசாருதீன் என்கிற அசார்(வயது 36) என்பவரை கேரள மாநிலம் பையூர் சிறையில் வைத்து என் ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு கைதாகி கேரளா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் இவர் 2019 ஆம். ஆண்டு இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியுடன் பேஸ்புக் நண்பராகவும் இருந்ததும் அப்போதைய விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கிலும் சம்பந்தப்பட்ட 13வது நபராக கைதான அவரை பலத்த பாதுகாப்புடன் என் ஐ.ஏ அதிகாரிகள் சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர் . கார் வெடிப்பு வழக்கில் உயிரிழந்த ஜமேசா முபின் உள்ளிட்டோர் முகமது அசாருதீனை கேரளா சென்று சிறையில் வைத்து சந்தித்து பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது . இதன் அடிப்படையில் முகமது அசாருதீன் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..