ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் அதிரடி திட்டம்- விரைவில் அமல்..!

இந்தியாவில் உள்ள மக்களின் நலன் கருதி ரேஷன் வினியோக திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 3 படிநிலைகளில் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தான் தற்போது மக்களுக்கு குட்நியூஸ் கிடைத்துள்ளது.

இந்தியாவில் மத்திய, மாநில அரசின் பங்களிப்புகளில் மானிய விலையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சட்டத்தின் கீழ் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் பயன்பெறும் குடும்பங்களுக்கு மாதத்துக்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. அதோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ரூ.3க்கு ஒரு கிலோ அரிசி, ரூ.2க்கு ஒரு கிலோ கோதுமை ரூ.1க்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.

கொரோனா பரவ தொடங்கியபோது மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தை தொடங்கியது. அதன்படி ரேஷன் அட்டையில் பெயர் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 2023 டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் ரேஷன் வினியோகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

அதாவது பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த அரிசியில் சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்டவை அதிகமாக கிடைக்கும். இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிறந்த உணவை வழங்க முடியும். வழக்கமான அரிசியில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் தொழில்நுட்பங்களுடன் எக்ஸ்ட்ரூட்டர் கருவி பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை 3 படிநிலைகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் முதல் திட்டம் என்பது மதிய உணவு திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டது. இது நடைமுறையில் உள்ளது. 2வது திட்டம் என்பது குறிப்பிட்ட மாவட்டங்களை தேர்வு செய்து பொது வினியோக திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது. இதுவும் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது தமிழ்நாட்டில் திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தான் இந்த திட்டத்தை விரிவுப்படுத்துவது தான் 3வது படிநிலையாகும்.

இந்த 3வது படிநிலைகளில் 2024 மார்ச் மாதத்துக்குள் செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழக்கமான அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான பயிற்சிகள், விழிப்புணர்வுகள் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் விரைவில் பல மாவட்டங்களில் சாதாரண அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.