செல்போன் டவர் திருட்டு: கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை

செல்போன் டவரில் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை

கோவை, சரவணம்பட்டி துடியலூர் சாலையில் கே.ஜி.ஐ.எஸ்.எல். பகுதியில் செயல்பாடற்ற நிலையில் இருந்த ஏர்செல் டெல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், ஏசி, 40 மீட்டர் டவர், பேட்டரி உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் ஏர்செல் நிறுவனத்திற்கு சொந்த செல்போன் டவர் 1999 முதல் இருந்து வந்தது. கடந்த 2018 ம் ஆண்டு முதல் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியத்தைத் தொடர்ந்து செல்போன் டவர்கள் செயல்பாடு இன்றி இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஏர்செல் நிறுவன ஊழியர்கள் சோதனைக்காக சரவணம்பட்டி துடியலூர் சாலையில் கே.ஜி.ஐ.எஸ்.எல். பகுதியில் இருந்த செல்போன் டவருக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு இருந்த செல்போன் டவரில் இருந்து ஜெனரேட்டர், ஏசி, 40 மீட்டர் டவர், பேட்டரி உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜி.டி.எல். இன்ப்ரா ஸ்டரக்சர் நிறுவன மேலாளர் அர்ஜுனன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.