குற்றப் பின்னணி கொண்ட எம்பி,எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்-சிறப்பு நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.!

டெல்லி : குற்றப் பின்னணி கொண்ட எம்பி, எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி பாஜக வழக்கறிஞர் அஷ்வினி உபதயாயா உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

அப்போது நீதிபதிகள் குற்றப்பின்னணி கொண்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை கீழமை நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கை விரைந்து முடிக்கும் விதமாக அந்தந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தாமாக முன்வந்து தங்கள் தலைமையில் சிறப்பு அமர்வை உருவாக்கி விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்தனர். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.