கோயில் உண்டியல் எண்ணிக்கையின் போது தங்கக் கொலுசுகள் திருட்டு – சிசிடிவி கேமராவில் சிக்கிய அறநிலையத் துறை உதவி ஆணையர்.!!

திருப்புவனம்: திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின்போது, தங்கக் கொலுசுகளை திருடியதாக கோயில் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோயிலின் உண்டியல் எண்ணிக்கை, உதவி ஆணையர் வில்வமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில்,ரூ.12.14 லட்சம் ரொக்கம், 291.400கிராம் தங்க நகைகள், 173.300 கிராம் வெள்ளி நகைகள் காணிக்கையாக கிடைத்தன.

சிசிடிவி கேமராவில் சிக்கினார்: உண்டியல் எண்ணிக்கை முடிந்ததும் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, தலா 4 பவுன் மதிப்பிலான 2 தங்கக் கொலுசுகளை உதவி ஆணையர் வில்வமூர்த்தி எடுத்தது தெரியவந்தது.

இதைப் பார்த்த ஊழியர்கள் இந்து சமய அறநிலையத் துறை சிவகங்கை இணை ஆணையர் பழனிகுமார், மானாமதுரை ஆய்வாளர் அய்யனார் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கோயிலில் விசாரணை நடத்தினர்.

அப்போது ஒரு கொலுசை திருப்பிக் கொடுத்த வில்வமூர்த்தி,மற்றொரு கொலுசைத் திருப்பித்தர மறுத்துவிட்டார். இது தொடர்பாக ஆய்வாளர் அய்யனார், திருப்புவனம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து இணை ஆணையர் பழனிக்குமாரிடம் கேட்டபோது ”உதவி ஆணையர் நகை எடுத்தது குறித்து அரசுக்குத் தெரிவித்துள்ளோம். அரசு உத்தரவுப்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.