கோவை கோர்ட் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய வழக்கு… கைதான டிரைவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு..!

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சிவகுமார் லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர் தனது கணவர் மற்றும் மகள்களை விட்டுவிட்டு அந்த நபருடன் குடும்பம் நடத்தி வந்தார். இதை அறிந்த சிவக்குமார் தனது மனைவியை வசிக்கும் இடத்துக்குச் சென்று அவரை பலமுறை தன்னுடன் வரும்படி கூறினார். ஆனால் அவர் வரவில்லை. இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜராக கவிதா கடந்த மாதம் 23 ஆம் தேதி வந்தார். அப்பொழுது நீதிமன்றத்திற்கு வந்த சிவகுமார் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தனது மனைவி மீது ஆசிட் வீசினார். இதில் படுகாயம் அடைந்த கவிதா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் துறை வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் சிவக்குமார் தனக்கு ஜாமீன் கேட்டு கோவை மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நாளை மறுநாள் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.