ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு: இன்று முக்கிய முடிவெடுக்கும் சென்னை உயர்நீதிமன்றம்..!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிராக லாபம் தரக்கூடிய இரட்டை பதவியில் இருப்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய முடிவெடுக்கிறது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே அவர் பதவியேற்ற நாளில் இருந்து தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு உள்ளது.

அதில் கல்வி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பல்கலைக்கழக நிர்வாகம், நீட் விலக்கு மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாதது போன்றவை இன்னும் சர்ச்சையாக உள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இருப்பவர் கண்ணதாசன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் “ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ம் தேதி தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றுகொண்டார். அவர். பதவியேற்ற நாளிலிருந்தே பிரச்சனைக்குரிய நபராகவே இருந்து வருகிறார்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள கோப்புகளில் உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்தி வருகிறார். எந்த ஒரு காரணமும் இன்றி மாதக்கணக்கில் கோப்புகளை நிலுவையில் வைத்து பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் அறக்கட்டளை அமைப்பின் தலைவராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரோவில் அறக்கட்டளை அமைப்பின் சட்டத்தின் கீழ் அதன் தலைவராக பதவி வகித்து வருபவருக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 158 உட்பிரிவு 2 ன் கீழ் ஒரு மாநிலத்திற்கான ஆளுநராக பதவியில் இருப்பவர் லாபம் தரக்கூடிய எந்த ஒரு நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதையும் மீறி ஆர்.என். புதுச்சேரி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான செயலாகும். ஆர்.என்.ரவி ஆளுநராக பதவி ஏற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே ஆளுநராக பதவி வகிக்க அவர் தகுதி அற்றவர். ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.” என்று கண்ணதாசன் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி மனுதாரர் கண்ணதாசன் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், மற்ரும் மூன்றாவது பிரதி வாதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்னும் பட்டியலிடப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முக்கிய முடிவை எடுக்கிறது. இந்த வழக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.