குரங்கு அம்மை நோய் காற்றின் மூலம் பரவுமா..? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!!

குரங்கு அம்மை நோய் காற்றின் மூலம் பரவுமா என ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958ம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோயை போல குரங்குகளிடம் பரவிய அம்மை நோய் மனிதர்களிடையே பரவுவதையே குரங்கு அம்மை நோய் என அழைக்கின்றன. வழக்கமாக மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோயாகிய இந்த குரங்கு அம்மை நோய், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் பரவி வருவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டது. குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும், சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்றும், எனவே இதனை கருத்தில் கொண்டு உலக நாடுகள் உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், குரங்கு அம்மை நோய் காற்றில் பரவுகிறதா என்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர், டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் குரங்கு அம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறியுள்ளார். இதுவரை பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 29 நாடுகளில் சுமார் ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.