பட்ஜெட் 2023… பிரதமர் மோடி அரசில் கஜானாவில் குவிந்த பணம் ..!

ந்தியாவின் மொத்த நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 24.58 சதவீதம் வரையில் உயர்ந்து 14.71 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

இந்திய அரசின் நேரடி வரி வசூலில் ஏற்பட்ட தடாலடி உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணமாகத் தனிநபர் வருமான வரி அதிகரிப்பு பெரும் பங்கு வகித்துள்ளது என மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ரீஃபண்டுகளை அட்ஜெஸ்ட் செய்த பின் நிகர நேரடி வரி வசூல் அளவு 12.31 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் சுமார் 19.55 சதவீதம் அதிகமாகும்.

2022-23 ஆம் நிதியாண்டில் மார்ச் 2022 முதல் ஜனவரி 10, 2023 வரையிலான காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூல் அளவு 12.31 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை எட்டியது மூலம். மத்திய அரசின் 2023 ஆம் நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில் நேரடி வரி இலக்கான 14.20 லட்சம் கோடி ரூபாயில் 86.68 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த வரி வசூல் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கும் மற்றும் கூடுதல் செலவினங்களுக்கு எதிராக Buffer-ஐ உருவாக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் கூடத் தொடர்ந்து 1.4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி வருகிறது.

2022-23 ஆம் நிதியாண்டில் நேரடி வரிகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றில் ஏற்பட்டு உள்ள வரி வசூல் கூடுதல் செலவினங்களைக் கணிசமான பகுதியை ஈடு செய்யும் என ICRA அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணரான அதிதி நாயர் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

வரி வசூலில் பதிவாகியுள்ள உயர்வு, 2023 ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவுகள், பல நல திட்டங்களுக்கும், விலை கட்டுப்பாட்டுக்கும் அளிக்கப்பட்ட கூடுதல் மானிய தொகைக்கும் பயன்படும். இந்தக் கூடுதல் செலவுகள் என்பது கடந்த ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அளவீடுகளை விடவும் அதிகமாகச் செலவானது.

இந்த நிலையில் நாட்டின் மொத்த வரி வசூல் அளவீட்டில் கார்பரேட் வரி (சிஐடி) வசூல் 19.72 சதவீதமும், தனிநபர் வருமான வரி (பிஐடி) வசூல் 30.46 சதவீதமும் அதிகரித்தது எனப் புதன்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் அதன் வரலாற்று உச்ச அளவான 1.68 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருந்தது. இந்த அளவை மீண்டும் எட்டவோ, தாண்டவோ முடியாவிட்டாலும், தொடர்ந்து ஒவ்வொரு மாதம் 1.4 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவீட்டை எட்டி வருகிறது.