கோவையை விட்டுக் கொடுக்காத பாஜக .. கொடநாடு வழக்கை கையிலெடுத்த ஸ்டாலின்.. ஓபிஎஸ்ஸுக்கு அடிக்குது அதிர்ஷ்டம்..!!

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பல்வேறு சட்ட போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மட்டும் நம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறதாம்.

எடப்பாடி பக்கம் எவ்வளவு ஆதரவாளர்கள் இருந்தாலும், அவரால் பொதுச்செயலாளர் பதவியை பெற முடியாது என்ற தீவிர நம்பிக்கையில் ஓ பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்களும் உள்ளனராம்.

ஒரு சேருக்கு நீண்ட நேரமாக நடக்கும் மியூசிக் சேர் போட்டி என்றால் அது அதிமுகவில் தற்போது நடக்கும் ஒற்றை தலைமை மோதல்தான். ஜெயலலிதா, சசிகலாவிற்கு அடுத்தபடியாக எப்படியாவது பொதுச்செயலாளர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.

உங்களுக்கு சேர் தானே வேண்டும்.. இந்தாங்க இணை ஒருங்கிணைப்பாளர் சேர்.. பொதுச்செயலாளர் பதவிக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்று முட்டுக்கட்டை போட்டு வருகிறார். எடப்பாடி பாட.. அதற்கு ஓபிஎஸ் எதிர்பாட்டு பாட அதிமுகவில் நடக்கும் கச்சேரி நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் நேற்று நிர்வாகிகளை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் முக்கியமான சில விஷயங்களை பேசி இருக்கிறாராம். நேற்று தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த ஓபிஎஸ்.. நீண்ட சட்ட போராட்டத்திற்கு ரெடியாக இருங்கள். வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று உள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அவர்கள் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் நீண்ட நாள் விசாரணை நடக்கும்.

நாம் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் பிரச்சனை இல்லை. எப்படியும் ஜூலை 11ம் தேதி கூட்டம் நடக்காது. இன்னும் 11 நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்ப்பு வருவது கஷ்டம். வழக்கு விசாரணைக்கு வரவில்லை என்றால், அவர்களால் பொதுச்செயலாளர் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. உயர் நீதிமன்ற உத்தரவு நமக்கு சாதகமாகவே இருக்கிறது என்று ஓபிஎஸ் கூறி இருக்கிறாராம்.

அதோடு டெல்லி நமக்கு சாதகமாக இருக்கும். அவர்கள் சொல்லித்தான் எடப்பாடியோடு இணைந்தேன். அவர்கள் கண்டிப்பாக என்னை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். டெல்லி பயணத்தில் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறேன். டெல்லி நமக்கு ஆதரவாக இருக்கும் என்று ஓபிஎஸ் நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறாராம். டெல்லி எடப்பாடி பக்கம் சாய வாய்ப்பே இல்லை என்று உறுதியாக ஓ பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறாராம்.

முக்கியமாக கொங்கு மண்டலத்தில் பாஜக வளர வேண்டும் என்று நினைக்கிறது. எடப்பாடி வலுவாக இருந்தால் பாஜக அங்கு வளர முடியாது. கொங்கு மண்டலத்தை விட்டுக்கொடுக்க பாஜக விரும்பாது. இதன் காரணமாக பாஜக எடப்பாடிக்கு எதிராக தன்னை வளர்ந்துவிடும் என்று தீவிரமாக ஓபிஎஸ் நம்புகிறாராம். நேற்று நிர்வாகிகள் மீட்டிங்கிலும் கொங்கு மண்டல பாலிடிக்ஸ் பற்றி ஓ பன்னீர்செல்வம் பேசி உள்ளாராம். இந்த விஷயம் காரணமாக பாஜக தன் பக்கம் நிற்கும் என்று உறுதியாக நம்புகிறாராம்.

அதோடு கோடநாடு வழக்கிலும் பிடி இறுகுவதை ஓபிஎஸ் கவனித்துள்ளார். இதனால் அதிமுக நிர்வாகிகளிடம்.. கோடநாடு வழக்கில் அரசு எடப்பாடிக்கு குறி வைக்கிறது. ஜெயலலிதாவிற்கு ஒரு சொத்து குவிப்பு வழக்கு போல எடப்பாடிக்கு இந்த வழக்கு. அவர் பொதுச்செயலாளர் ஆனாலும் வழக்கு தொடரும். அதிமுக வலுவாக இருக்காது. மீண்டும் தலைமை பிரச்சனை. அதனால் அவரிடம் செல்ல வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் பேசி வருகிறாராம்.

சில எடப்பாடி ஆதரவாளர்களிடம் இதை பற்றி நேரடியாக அவர் பேச போகிறாராம். முதல்வர் ஸ்டாலின் விட மாட்டார். கோடநாடு வழக்கில் கண்டிப்பாக அவர் நடவடிக்கை எடுப்பார். எனவே எடப்பாடியை ஆதரிப்பதில்லை எந்த பயனும் இல்லை என்று ஓபிஎஸ் பேச உள்ளாராம். ஒரு பக்கம் டெல்லி ஆதரவு.. இன்னொரு பக்கம் கோடநாடு வழக்கு இரண்டின் மூலமும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் ஓபிஎஸ்!