குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் மீதான எண்ணிக்கை இன்று மாலை வெளியாகும்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரும், பழங்குடியின பெண் தலைவருமான திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார். திரௌபதி முர்மு கடந்த வாரமே வேட்புமனு தாக்கல் செய்து விட்ட நிலையில், ஜூன் 27 ஆம் தேதி யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதான வேட்பாளர்களான இவர்களை தவிர மேலும் 100க்கும் மேற்பட்டோர் சுயேட்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், பலர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
நேற்று மாலை நிலவரப்படி 115 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று ( வியாழக்கிழமை ) நடைபெறுகிறது. இதன்பிறகு ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் விவரம் இன்று மாலை வெளியாகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை 50 எம்.பி, எம்.எல்.ஏக்கள் முன்மொழிய வேண்டும். அத்துடன் 50 பேர் வழிமொழிய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது,
Leave a Reply