வரும் 25-ல் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி..!

புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தார்.

அப்போது பிஹாரைச் சேர்ந்த சிலர், ரயில்வே துறையில் வேலை பெற லாலு குடும்பத்தினருக்கு தங்கள் நிலத்தை லஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன.

இந்த வழக்கில் கடந்த 11-ம்தேதி ஆஜராகுமாறு பிஹார் துணை முதல்வரும் லாலு மகனுமான தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ அதிகாரிகள் 2-வது முறையாக சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதனிடையே, தேஜஸ்வி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பிஹார் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 5-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறுவதால் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என சிபிஐ விசாரணை அதிகாரிக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால் தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறார். இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும்’ என கோரி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தினேஷ்குமார் சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மாதத்தில் தேஜஸ்வியை கைது செய்ய மாட்டோம் என சிபிஐ தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 25-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி இந்த மனுவை முடித்து வைத்தார்.