பவானிசாகரில் ரூ.119 கோடி செலவில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை..!

சத்தியமங்கலம் :
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர்ப் பகுதியில் ரூ 1.19 கோடி செலவில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக  பூமி பூஜை நடைபெற்றது. இதனால் பவானிசாகர் சுற்று வட்டார பகுதி மக்கள் முழு நேர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமங்களான புங்கார், காராச்சிக்கொரை, சுஜில்குட்டை, கொத்தமங்கலம், தயிர் பள்ளம், வெள்ளியம்பாளையம், தொட்டம்பாளையம், எரங்காட்டூர், ஆலாம்பாளையம், கரிதொட்டம்பாளையம், நால்ரோடு, கோடேபாளையம், வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், தொப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அல்லது 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. பவானிசாகரில் 1960 முதல் அரசினர் மருந்தகம் மட்டுமே செயல்பட்டு வந்தது. இதில் ஒரு மருத்துவர் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே சிகிச்சை அளித்து வந்தார். இதனால் அவசர சிகிச்சை, பிரசவம், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளுக்கு தொலைதூரம் செல்ல வேண்டிய இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும் பவானிசாகர் அரசினர் மருந்தகம் அமைந்துள்ள பகுதியில் போதுமான இட வசதி உள்ளதால் இங்கு அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ச்சியாக பெரு முயற்சி மேற்கொண்டும்  முழு நேர சிகிச்சை அளிக்கும் வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையோ, அரசு ஆரம்ப சுகாதார நிலையமோ இங்கு கொண்டுவர இயலவில்லை. இதற்கிடையே கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றதும், இப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் பவானிசாகரில் முழு நேர சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற முனைப்புடன் பெரும் முயற்சி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து நீலகிரி எம்பி ஆ.ராசா, தமிழக வீட்டு வசதி,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் பரிந்துரையின் பேரில் பவானிசாகர் பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான மோகன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை சந்தித்து பவானிசாகரில் முழு நேர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பவானிசாகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து கடந்த மாதம்  ரூ.1.19 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பவானிசாகர் அரசினர் மருந்தக வளாகத்தில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் மோகன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள், பேரூராட்சி துணைத் தலைவர் வைகுந்தன், கவுன்சிலர்கள் தூயமணி, சந்திரமோகன், விஜயலட்சுமி, கனிதா, சரண்யா மற்றும் பேரூர், ஒன்றிய கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.