பயணிகளின் கவனத்திற்கு… பொள்ளாச்சி வழியாக செல்லும் பாலக்காடு – சென்னை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்..!

கோவை: சென்னை அருகே வியாசர்பாடி பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு – சென்னை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணி காரணமாக, பாலக்காட்டில் இருந்து பிப்ரவரி 28ஆம் தேதி பொள்ளாச்சி வழியாகச் செல்லும் பாலக்காடு – எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 22652) திண்டுக்கல் ரயில் நிலையத்தை அடுத்து கரூா், மோகனூா், நாமக்கல், ராசிபுரம், சேலம், மொரப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிலையங்கள் வழியாகச் செல்லாது. மாறாக திண்டுக்கல் – விழுப்புரம் வழியில் சென்னை செல்லும். இந்த ரயில் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல, மேட்டுப்பாளையம் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 12672) பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும். எம்.ஜி.ஆா்.சென்னை சென்ட்ரல் – கோவை விரைவு ரயில் (எண்:12675) 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.