மக்களோடு பலமான கூட்டணி வைத்திருக்கிறோம் – இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் இபிஎஸ் பேச்சு.!!

சென்னை: மக்களோடு பலமான கூட்டணி வைத்திருக்கிறோம் என்று அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று இஃப்தார் நோன்பை திறந்துவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், புண்ணியங்கள் பூத்துக்குலுங்கும், தர்மங்கள் செழிக்கும் மாதம், ஏழை, எளிய மக்கள் மீது இரக்கம் காட்ட வேண்டிய மாதம் ரமலான் மாதம். இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது ஜெயலலிதா காட்டிய அன்பையும், பாசத்தையும் கொஞ்சம்கூட குறையாமல் காட்டுவோம் என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். பலமான கூட்டணி என்று சிலர் கூறுகின்றனர். தமிழக மக்களோடு நாங்களும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம். எந்த கூட்டணி பலமானது என்று தேர்தலில் தெரியத்தான் போகிறது. திமுக ஆட்சி முடியத்தான் போகிறது. தேமுதிகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கடந்த 2014 தேர்தலில் வெற்றி பெற்ற 38 அதிமுக எம்பி.க்கள் மக்களவையில், தமிழக மக்களின் குரலாக ஒலித்தார்கள். இப்போது திமுக கூட்டணியில் 39 எம்பிக்களை வைத்துக்கொண்டு, வாக்களித்த மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால் அது வீண்தான். அதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் விளம்பில் பேசுகிறார். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள் முகவரி தெரியாமல் போனார்கள். அதுபோல இவர்களும் போவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.