அடேங்கப்பா!! விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்… பரிசுத் தொகை ரூ.464 கோடி..!

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

விம்பிள்டன் போட்டி இன்று தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை லண்டனில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகின் 2-ம் நிலை வீரரும், செர்பியாவைச் சேர்ந்தவருமான நோவக் ஜோகோவிச் இந்த ஆண்டின் முதல் 2 கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்சு ஓபனில் வெற்றி பெற்றபோது அவர் புதிய சாதனையைப் படைத்தார்.

ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலை பின்னுக்கு தள்ளி 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார் ஜோகோவிச்.

இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் வரிசையில் உள்ள அல்கராஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெத்வ தேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். விம்பிள்டன் போட்டியில் மட்டும் அதிகபட்சமாக 8 ஒற்றையர் பட்டங்களை ஸ்விட்சர்லாந்து வீரர் பெடரர் வென்று முதல் இடத்தில் உள்ளார்.

தற்போது ஜோகோவிச் 7 விம்பிள்டன் பட்டத்தை வென்று அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இந்த விம்பிள்டனில் ஜோகோவிச் பட்டத்தை வென்றால் பெடரரின் சாதனையை அவர் சமன் செய்வார். இந்நிலையில், முன்னிலை வீரரான ரஃபேல் நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை .

மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் உள்ள இகா ஸ்வியாடெக், ஷபலென்கா, எலினாரைபாகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) போன்ற முன்னணி வீராங்கனைகள் தங்களது திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

இதனிடையே விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மொத்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.பரிசுத் தொகை ரூ.464 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.