அடேங்கப்பா!! இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா… சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு..!!

டிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

பூச்சிகளில் அதிக புரதச்சத்து இருக்கும் காரணத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அவற்றை உணவாகக் கொள்கின்றனர்.

அப்படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

மாம்பழம், நாவல்பழ மரம் முதலிய பழம் தரும் மரங்களில் மட்டுமே வாழும் இந்த வகை சிவப்பு எறும்புகளைக் கொண்டே ஓடிசாவில் “கை சட்னி” எனப்படும் இந்த எறும்பு சட்னி தயாரிக்கப்படுகிறது.

ஆசியாவின் இரண்டாவது பெரிய உயிர்க்கோளமான சிமிப்பால் காடுகளைச் சுற்றியுள்ள ஊர்களான ராய்ரங்ப்பூர், பேத்நோட்டி, உதாலா போன்ற பகுதிகளில் இந்த எறும்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அங்கு வாழும் பழங்குடியினரின் பிரதான உணவாக இந்த சட்னி இருக்கிறது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களிலும் இந்த சட்னி உண்ணப்படுகிறது.

மரத்திலிருந்து உயிருடன் சிவப்பு எறும்புகளை அதன் முட்டைகளுடன் எடுத்து அதனுடன் உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் போன்ற பொருட்களைச் சேர்த்து அரைத்து இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது.

“இது மற்ற சட்னி மற்றும் துவையல் வகைகளைக் காட்டிலும் வித்தியாசமாக சற்று புளிப்பாகவும், மண் மனத்துடனும் இருந்தது. சாதத்துடன் சேர்த்து இதை பழங்குடியினர் உண்டு வருகின்றனர்,” என்று இதைச் சுவைத்த வழக்கறிஞர் மற்றும் யூடியூபருமான சுவாதி ஹரிஹரன் கூறினார்.

எறும்புகளில் அதிக அளவில் புரதம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் காணப்படுவதால் இந்த சட்னியில் அதிக மருத்துவ அம்சங்கள் இருக்கிறது. மேலும் கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி-12 மிகுதியாக இருக்கும் இது, சளி, இருமல், மூட்டு வலி முதலியவற்றுக்குச் சிறந்த மருந்தாக இருக்கிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளைத் தீர்க்கும் அளவுக்கு மருத்துவ குணங்களை உடையதாக மலைவாழ் மக்கள் நம்புகிறார்கள் என்று மயூர்பஞ்ச் ‘கை’ கூட்டுறவு சமூகத்தின் தலைவர் நயாதார் பதியில் தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்று காலத்தில் இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் வலுப்படுத்த உதவியதால், இது பெருமளவு ஈர்ப்பைப் பெற்றது. இதையடுத்து மயூர்பஞ்ச் ‘கை’ கூட்டுறவு சமூகம், ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 2020ஆம் ஆண்டு இந்த சட்னிக்கு புவிசார் குறியீடு கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று இந்த பழங்குடி உணவு பொருளுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

இதன் மூலம் இந்த சட்னியின் மதிப்பு பெருகியுள்ளது. கொரோனாவிற்குப் பிறகு சந்தையில் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட எறும்புகளின் விலை, தற்போது கிலோ ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்புகள் இருப்பதாக வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மயூர்பஞ்ச் மாவட்டத்தின் உதாலா பகுதியைச் சேர்ந்த பழங்குடியினரான சந்தன், “இந்தத் தகுதியைப் பெறுவதன் மூலம் எங்கள் பழங்குடி இனத்திற்கே அதிக நன்மை கிடைக்கவுள்ளது. இது மட்டுமின்றி பெருமளவில் மக்கள், இதன் மருத்துவ நன்மைகளைப் பெறவிருக்கிறார்கள்,” என்று கூறினார்.

உள்ளூர் உணவகங்களில்கூட தற்போது இந்த சட்னி கிடைக்கிறது.

ஆண்டாண்டு காலமாக ஈசலை உணவாக உண்பது தமிழக மக்களின் பழக்கமாக இருக்கிறது.

இந்த சிவப்பு எறும்புகள், சூப் மற்றும் பூரணம் போல் வைத்தும் உண்பதுண்டு. குறிப்பாக மயூர்பஞ்ச் கூட்டுறவு சமூகம் குளிர் பிரதேசத்தில் வாழும் ராணுவ வீரர்களுக்கு நுண்ணூட்டச் சத்துகள் பெறுவதற்காகவும் அதிக வலுவூட்டுவதற்காகவும் உணவுப் பட்டியலில் இவ்வகை உணவுகளைச் சேர்க்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.

சிவப்பு எறும்புகளைப் போல பல்வேறு வகையான பூச்சி வகைகளை உலகம் முழுவதும் மக்கள் உண்டு வருகிறார்கள். ஏனென்றால் அதில் புரதம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்கள் இதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மையாக பழங்குடியினரும் மலைவாழ் மக்களும் பூச்சிகளை உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.

தமிழ்நாட்டிலும் சிவப்பு எறும்புகள், ஈசல், இலிப்பூச்சி போன்றவற்றை மக்கள் சாப்பிடுகிறார்கள். கொடைக்கானலில் இருக்கும் பளியர் பழங்குடியினர் இதே போல சிவப்பு எரும்பை சட்னியாக சாப்பிடுகிறார்கள். சென்னையின் கடற்கரைப் பகுதிகளில் இலிப்பூச்சி உணவுக்கு உணவு பிரியர்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால் ஆண்டாண்டு காலமாக ஈசலை உணவாக உண்பது தமிழக மக்களின் பழக்கமாக இருக்கிறது. மழைக்காலத்தில் அதிக அளவில் வீட்டிலிருக்கும் பல்புகள், ட்யூப்லைட்களை நோக்கிப் படையெடுத்து வரும் ஈசல்களைப் பிடித்து அவற்றை அரிசியுடன் வறுத்து உண்பது கிராமப்புற மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. பேருந்து நிலையங்களில் வறுத்த ஈசல் பொட்டலங்களில் விற்கப்படுகின்றன.