அரசு பேருந்தும் காரும் மோதிக் கொண்டதில் தகராறு: பயணிகள் அவதி- காவலர் தனது பணத்தை கொடுத்து சமரசம்..!

சூலூர் அருகே குமரன் கோட்டம் பகுதியில் அரசு பேருந்தும் காரும் உரசிக்கொண்டன. இதில் இரு நபர்களும் தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த காவலர் தனது சொந்தப் பணத்தை கொடுத்து சமரசம் ஏற்படுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

கோவையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்கிழமை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சூலூர் அருகே குமரன் கோட்டம் பகுதிக்கு வந்த போது பேருந்தின் பக்கவாட்டில் ஒரு ஆட்டோ கார் வந்து கொண்டிருந்தது. அச்சமயத்தில் அரசு பேருந்துக்கு முன்பு சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்து பயணிகளை ஏற்ற நின்றது. இதனை எதிர்பார்க்காத திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுனர் திடீரென வலது பக்கம் திருப்பினார். இதில் காரின் பக்கவாட்டில் உரசியது. இதனால் காரில் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. இதனை அடுத்து சூலூர் காவல் நிலையம் முன்பு தங்களது வாகனத்துடன் வந்த இரு தரப்பினரும் வாய்தகராரில் ஈடூபட்டனர். அப்போது அங்கு வந்த சூலூர் காவல் நிலைய காவலர் சந்தானம் இரு தரப்பையும் அழைத்து சமரச பேச்சு நடத்தினர். ஆனால் தொடர்ந்து இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் காவலரிடம் தங்களுக்கு ஊருக்கு செல்ல நேரமாகிறது என புகார் தெரிவித்தனர். இதனால் காவலர் சந்தானம் கார் உரிமையாளரை அழைத்து அவர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் நஷ்ட ஈடாக கேட்ட தொகையை கொடுத்து சமாதானம் செய்தார். மேலும் பேருந்தில் இருந்த பயணிகளை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்குமாறு அரசு பேருந்து ஓட்டுநருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதனை பார்த்த பயணிகள் காவலர் சந்தானத்தை பாராட்டினர். இதனை அறிந்த சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் காவலரின் சமயோஜித செயலை பாராட்டினார். இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.