கோவை- அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுமான பணி – போக்குவரத்து மாற்றம்..!

கோவை அவிநாசி ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது .இதற்காக மொத்தம் 306 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட வேண்டும். இதில் இதுவரை 273 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் விமான நிலையம், பீளமேடு ஆகிய இடங்களில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது .இந்த நிலையில் அண்ணாசலை மற்றும் ஜி. கே .என். எம். மருத்துவமனை அருகே விடுபட்ட கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட உள்ளன .இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது .இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:- அண்ணா சிலை அருகில் 3 கான்கிரீட் தூண்களும்,ஜி .கே. என்.எம். மருத்துவமனை அருகே ஒரு தூணும் அமைக்கப்படுகிறது. இதற்காக இந்த சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஜி.கே என்.எம். மருத்துவமனையில் இருந்து அவிநாசி ரோடு வரும் வாகனங்கள் இடது புறமாக திரும்பி லட்சுமி மில் சந்திப்பு சென்று அங்கிருந்து உப்பிலிப்பாளையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லலாம். இதே போல பீளமேடு லட்சுமி மில் சிக்னல் பகுதியில் இருந்து ஜி .கே.என். எம் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அண்ணா சிலை சிக்னல் வந்து அங்கிருந்து செல்லலாம். அண்ணா சிலை அருகில் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட உள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.