பேரிடர் சவால்களை எதிர்கொள்ள அனைத்துத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்- தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்..!

டகிழக்கு பருவமழைக் காலத்தில், பேரிடர் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில், நடந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பது, தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்காத வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்வது, எந்தெந்த பகுதியில் கடந்த காலங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கியதோ அந்த பகுதிகளுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி பணிகளை வேகப்படுத்துவது குறித்தும், தமிழகத்தின் மழை, புயல் பாதிப்புகள் குறித்து விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் பேசிய தலைமை செயலாளர் இறையன்பு, ‘பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சமீப காலங்களில் ஆறுகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்தில் பேரிடர் தொடர்பான வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்படி பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

மேலும், குறைந்த நேரத்தில் ஏற்படும் அதிகபட்ச மழைப் பொழிவு காரணமாக மழைநீர் தேங்குதல் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்தல் போன்ற இடர்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வண்ணம் வானிலை குறித்த முன்கணிப்பு தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே வழங்கும்பட்சத்தில், பொதுமக்கள் தங்கள் பயண திட்டங்களை வரையறுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இதனால் வாகன நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் இயல்பாக தங்கள் பயணங்களை மேற்கொள்ளமுடியும். இதற்கான தகவல் பரிமாற்ற வசதிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.

பேரிடர்காலங்களில் பொதுமக்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க ஏதுவாக மேற்படி மையங்களை நல்ல முறையில் பராமரித்து தயார் நிலையில் வைத்து, வெள்ளக்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் போதுமான உணவு பொட்டலங்கள் தங்கு தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய ஏதுவாக தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

பேரிடர் காலங்களில் ஏற்படும் சாலை சேதங்களை உடனுக்குடன் செப்பனிட்டு போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்திட வேண்டும். பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபடும் வண்ணம் தங்களது வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க முப்படை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கினார்.

மேலும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு, பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டுமெனவும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.

நீர்வழி, கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் போன்ற பணிகளை நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வள ஆதாரத் துறை மற்றும் நகராட்சித் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும், நீர் வழிகளின் கரைகளை பலப்படுத்த போதுமான மணல் மூட்டைகளை இருப்பு வைத்தல், சமுதாய உணவு கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சென்னை பெருநகர மாநகராட்சி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் வெள்ள நீரை வெளியேற்றும் பம்பு செட்டுகள் மற்றும் பிற உபகரணங்களின் செயல்பாடுகள் முன்னரே பரிசோதித்து தயார் நிலையில் வைக்க வேண்டும். மழை மற்றும் வெள்ள காலங்களில் ஏற்படும் தொற்று நோய் குறித்து சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். வெள்ள காலங்களில் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்’ என கால்நடை பராமரிப்பு துறைக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், புயல் பாதுகாப்பு நிவாரண மையங்கள் மற்றும் கூடுதல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்கள் ஆகியவற்றில் உடனடியாக ஆய்வு செய்து மழைநீர் வடிகால் கட்டும் பணியை மேற்பார்வையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், பல்வேறு துறையின் அரசு செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள், இராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட ஒன்றிய அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.