அதிமுக இணைய வேண்டும்- இதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்… பசும்பொன்னில் மனம் திறந்த ஓபிஎஸ்..!

ராமநாதபுரம் : அனைத்திந்திய அண்ணா திமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் எனவும், ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் அதிமுக இணைய வேண்டும் என்பதே என அதிமுக எதிர்கட்சி துணை தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பிரம்மாண்ட முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஓபிஎஸ் உடன் அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் ஆதரவாளர்கள் புடை சூழ பசும்பொன் கிராமத்திற்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் 10 .5 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசத்தையும் ஓபிஎஸ் வழங்கினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” தேவர் தான் வாழ்ந்த காலத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். மக்கள் அனைவரும் சாதி,மத பேதமின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தவர் தேவர் திருமகனார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் குருபூஜை நாட்களில் சாற்றுவதற்காக அதிமுக சார்பில் 13 கிலோ தங்கக் கவசம் வழங்கி, அது குரு பூஜை நேரத்தில் நினைவிட சிலைக்கு சாற்றப்பட்டு, குருபூஜை முடிந்த பின் வங்கியில் சென்று நான் பொருளாளர் என்ற அடிப்படையில் அதை பெற்று வழங்கி வந்தேன்.

கடந்த 2017, இந்த ஆண்டு தங்க கவசத்தை பெற்று வழங்க முடியாத சூழல் இருந்தது. தற்போது நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், காந்திமீனாளிடமும் தங்க கவசத்தை வழங்க ஆட்சியேபனை இல்லை, குரு பூஜைக்கு தங்க கவசத்தை வழங்க வேண்டும் என 25 நாட்களுக்கு முன்பே வங்கியில் கடிதத்தை வழங்கினோம். ஆனால் திண்டுக்கல் சீனிவாசன் தான் தற்காலிக அதிமுக பொருளாளர் என்று கூறி தங்கக் கவசத்தை தன்னிடம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி மாவட்ட அலுவலரிடமும் அறக்கட்டளையிடமும் தங்க கவசம் வழங்கப்பட்டு தேவருக்கு சாற்றப்பட்டு உள்ளது. அனைத்திந்திய அண்ணா திமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான், அதன் அடிப்படையிலேயே 10 .5 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசம் வழங்கப்பட்டு உள்ளது. அறக்கட்டளையினர் தேவைப்படும் போது இந்த வெள்ளிக் கவசத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்னரைக் கோடித் தொண்டர்களும் இணைய வேண்டும் இணைய வேண்டும் அதுதான் எனது விருப்பம்.” என பேசினார்.