அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் பாதுகாப்பு விலக்கப்பட்டது… கோர்ட்டில் போலீசார் சொன்ன விளக்கம்..!

முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலன்று கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை என்று கூறி உள்ளார். தற்போது அந்த வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

மேலும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்த போது, சி. வி. சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ் தினகரன் ஆஜராகி, சமூக வலைதளங்கள் மற்றும் போன் கால் மூலமாக கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வருகிறது.

இதுதொடர்பாக அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எந்தவித முகாந்திரமும் இல்லை என கூறி புகாரை காவல்துறையினர் முடித்துவைப்பதாக தெரிவித்தார். காவல்துறை சார்பில் வழக்கறிஞர் பாபு முத்து மீரன் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது, சி.வி சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தோம்.

அப்போது அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிய வந்ததன் அடிப்படையில் அவருடைய பாதுகாப்பை விலக்கி கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சி.வி சண்முகத்தின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.