ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விவிபேட் எந்திரம்- சத்திய பிரதா சாகு உத்தரவு..!

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதனையடுத்து திருமகன் ஈவேரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படடு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப்ரவரி 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைபெறும் என்றும், பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவு, மார்ச் 02-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது, தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும். இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும்படை, 3 கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி அதிகாரிகளைக் கொண்ட குழுவும் அமைக்கப்படும்.ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ளவர்கள் , வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ளவர்களின் பெயர் பட்டியலிடப்படும்.

வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட பட்டியல் தனியாக வாக்காளர் துணைப்பட்டியலாக வெளியிடப்படும். துணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்களும் இடைத்தேர்தலில் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி இடைத்தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ 40,00,000 வரை செலவழிக்கலாம். ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அங்கு ரொக்கமாக அதிகபட்சம் ரூ 50,000 வரை மட்டுமே கையில் எடுத்துச்செல்ல அனுமதி. அதற்கு மேல் எடுத்துச் சென்றால் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.